Wednesday, June 6, 2012

My Life- An introspection


I WANT TO QUIT! இந்தக் குரலை எப்பொழுதேனும் உங்களுக்குள் கேட்டதுண்டா? நான் விலகிக்கொள்ள விரும்புகிறேன் அல்லது நான் விடுவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனப் பொருள் படும் இந்த நான்கு வார்த்தைகள் கொண்ட ஆங்கில சொற்றொடர் எப்பொழுதேனும் உங்கள் உள்ளத்துக்குள் ஓடக் கண்டதுண்டா? சில ஆண்டுகளாகவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும், அதுவும் என் குரலிலேயே!

எதில் இருந்து? என்ற கேள்விக்கு மட்டும் ஏராளமான பதில்கள். இதுதான் பதிலா? என்ற ஏராளமான கேள்விகள்.

வாழ்க்கையில் இருந்தா? வாய்ப்ப்பே இல்லை! எனக்கு இந்த வாழ்க்கையை நிறைய பிடித்திருக்கிறது, சில பிடிக்காத தருணங்களைக் கொண்டிருந்தாலும். எனக்கு அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, நட்புடன் சில சகோதரர்கள், சகோதரத்துவத்துடன் சில நண்பர்கள், கவிதை, இசை, வெப்பம்,  குளிர், மலை, மழை, காற்று, கடல், நதி அப்புறம் சச்சின் என எல்லாவற்றையும் பிடித்திருக்கிறது. கடும் துன்ப வேளைகள் என நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதுகளில், உயிர் மழை போல், தென்றல் போல், சட்டென இருள் விலக்கும் அகல் விளக்கு போல் தோன்றும் சில தீர்வுகளை, தெளிவை, துணிவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மன அழுத்தத்தின் உச்சத்தில், இந்தக் குரல் எழும் வேளையில் எல்லாம், இந்த இரவோடு எல்லாம் முடிந்து போனால், நாளைய விடியல் இல்லாமல் போனால் என்று தோன்றினாலும், ஐயோ! எனக்கு நாளைய அழகான விடியல் வேண்டுமே என்ற ஆசையான குரல், முதல் குரலை அழுத்தி மறைத்து விடும் அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. என் வாழ்க்கை, என் ப்ரச்சனை என்று யோசிக்கிறேனே, உண்மையாகவே, இது மட்டும் தான் வாழ்க்கையா? இந்த ப்ரச்சனை நிரந்தரமானதா? பின்னொரு பொழுதில் என் ப்ரச்சனைகள் ஒன்றுமில்லாமலே போகலாம், ஆனால் என் வாழ்க்கை முடிந்து போனால், யார் வந்தும் உயிர் தர வாய்ப்பில்லையே!. இந்த சாகரத்தில், நான் துளி தான். என் பாட்டன், பூட்டன் கடந்து வராத துயரங்களை நான் எதிர்கொள்ள வில்லை. என் தந்தையும் தாயும் அனுபவிக்காத ப்ரச்சனைகளை நான் எதிர்கொள்ளவில்லை. இதுவும் கடந்து போகும் எனப் புரிகிறது.

நான் இந்த வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறேன். நேசிப்பதிலும், நேசிக்கப்படுவதிலும் இருக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் என் இந்த நிமிட வாழ்க்கை வரை புரிந்து உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கை தந்த அடிகள் சற்று அதிகம் போல் தோன்றினாலும், நான் கடந்து போகும் உலகத்தில், காண்பவர்களை உற்று கவனித்தால், என் அடிகளும், வலிகளும் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. பிறப்பிலேயே ஊனமுற்றவர்களாகவும், பிறப்பால் ஊனமுற்றவர்களும், விபத்தால் அங்கங்களை இழந்தவர்களும் என்னைக் கடக்கையில், என்னை முழுமையாய் படைத்த, எல்லாவற்றையும் உணரும் பாக்கியம் தந்த அந்த எல்லாம் வல்ல இறைவனை, இயற்கையை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

குடும்பம் இல்லாதவர்களையும், குடும்பத்தால் கை விடப்பட்டவர்களையும், குடும்பத்தைத் தொலைத்தவர்களையும், இந்த மக்கட் பெருங்கடலில், குடும்பத்தால் தொலைக்கப்பட்டவர்களையும் காண்கையில், அழகான என் குடும்பத்தை அன்புடன், நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அடுத்த வேளை உணவுக்கு வக்கற்று கையேந்துபவர்களையும், குழந்தைகளை வித்தை காட்டுபவர்களாகவும், பிச்சை பாத்திரங்களாகவும், பணம் சம்பாதிக்கும் கருவியாகவும் பயன்படுத்துபவர்களையும், குப்பைத் தொட்டிகளில் எச்சில் காகிதங்கள் தேடுபவர்களையும் பார்க்கையில் என் எல்லா உணவு வேளை ப்ரார்த்தனைகளின் போதும் வேண்டும் கடவுளே! இந்த வேளை எனக்கு உணவு தந்ததுக்கு நன்றி என்று வேண்டுதலோடு, என்னைச் சுற்றிய இந்த உலகத்திற்கும், மூன்று வேளை உணவைத் தா என்ற வேண்டுகோளும் சேர்ந்து கொள்கிறது.

மனநிலை பிறழ்ந்தவர்களையும், தன்னை மறந்த நிலையில் போதையில் விழுந்து கிடப்பவர்களையும், மனம் நினைப்பதை மூளை அங்கீகரிக்கும் முன், தவறுகள் இழைத்துவிட்டு, சிறைக் கதவுகளின் பின்னால், வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் பரிதாபத்துக்குரியவர்களையும் பார்க்கையில், “ என்னை நன்றாய் வைத்தாய் இறைவா?” என்று தோன்றுகிறது.

இவ்வாறான தருணங்களில், எனக்குள் எழும் “ என்னை நன்றாய் வைத்தாய் இறைவா!” என்ற நன்றிக்குரிய அந்த மந்திர வார்த்தைகளை நான் உளமாற உருகித் தான் உச்சரித்திருக்கிறேன். இதை பல சமயங்களில் என் அம்மாவிடம்  நான் சொல்லியும் இருக்கிறேன். இவ்வாறாக இருக்கையில் வாழ்க்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை, அதற்கான தருணம் வரும் வரை.

பிறகு எதில் இருந்து?
உறவுகளில் இருந்தா?
உத்யோகத்தில் இருந்தா?
இன்னும் சில “ இருந்தா?”க்கள் தொடர்கின்றன. நாளை பார்க்கலாம்.

பயணங்கள் முடிவதில்லை!

2 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க அக்கா...எனக்கு நினைவு தெரிந்து அந்தக் குரலை நான் கேட்டதில்லை சில வருடங்களுக்கு முன்பு வரை...என் அண்ணனை இழக்கும் வரை...அதற்குப் பின்னர் - அன்பான பெற்றோர் இருந்தும், என்றும் துணையாக நண்பர்கள் இருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக மித்ரன் இருந்தும் - அடிக்கடி இந்தக் குரல் கேட்கிறது...என்னுடன் நிரந்தரத் தனிமை தங்கிவிட்டது...ஆனால் வாழ்க்கையின் மேல் வெறுப்பில்லை...யார் மேலும் கோபமும் இல்லை...யாரையும் புண்படுத்தாமல் வாழ முயலும் நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...

    உங்கள் 'பயணங்கள் முடிவதில்லை' படிக்கும்போது, எனக்கு தோன்றும்...நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்திக்கிறீர்கள் எப்படிப்பட்ட மனிதர்களுடன் தினம் பழகுகிறீர்கள் என்று ... இந்த சூழ்நிலைகளில் இந்தக் குரல் தோன்றாவிட்டால் தான் ஆச்சர்யம் என்று நான் நினைக்கிறேன்...நீங்களே சொன்னதுப்போல் 'இதுவும் கடந்து போகும்' ...

    அன்புடன்,
    மாலதி

    ReplyDelete
    Replies
    1. தெய்வம் என்ற ஒன்றை நம்புவோம் மாலதி! அண்ணனைப் பற்றி அறிந்ததும் மிக்க வேதனை அடைந்தேன். அவர் ஆத்மா ஆண்டவனுடன் இணைந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால், உனக்குள் இருக்கும் தனிமை மறைய வேண்டும் மாலதி! மித்ரனுக்காக மட்டுமல்ல, உனக்காகவும் தான். உன் சிரித்த முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது எனக்கு. அந்தச் சிரிப்பு உன் உள்ளத்தில் மட்டுமல்ல, உன் உலகம் முழுவதிலும் நிறைந்திருக்க நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். WELCOME TO BLOGGER. எழுது மாலதி. இசை போல் எழுத்தும் அருமருந்தாகும். அது எல்லோருக்கும் வாய்க்காது. உனக்கும் எனக்கும் வாய்த்திருக்கிறது. நாம் உணர்ந்ததை ஊருக்குச் சொல்வோம். நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் இரு. அன்புடன் காஞ்சனா…

      Delete