Monday, September 12, 2011

ஒரு விடியல்

நேற்றிரவு இதே நேரம், 10.30 மணியளவில் கன்று ஈன்றது, என் வீட்டுப் பசு. ஒரு வகையில் அது என் தங்கையின் குழந்தை. என் அம்மா பிறந்த போது, என் ஆயம்மாவிற்கு சீதனமாக, என் தாத்தா தந்த பசுவின் வாரிசின் வாரிசு ஈன்ற கன்று அது. கன்று ஈனும் நொடி வரை நிதானமாக சோளத்தக்கையை அசை போட்டுக் கொண்டிருந்தது பசு. அருகில் அதன் அம்மா. மற்றும் பார்வைக்குள் நாங்கள் அனைவரும். பாதுகாப்பாய் உணர்ந்திருக்குமோ? பதற்றமே இல்லாமல் நின்று கொண்டு இருந்தது பசு, பனிக்குடம் உடைந்த பின்னும். கால்நடை மருத்துவரை அழைக்க அண்ணன், பால்காரரை அழைக்க தம்பி, பாதுகாவலாய் அப்பா, படபடப்பாய் அம்மா, பசு மட்டும் நிதானமாய்.. அதற்கு வலிக்கிறது என்பதைக்கூட சத்தமில்லாமல், அங்குமிங்கும் நடந்தவாறு. கால்நடை மருத்துவர் உதவியாளர் உதவியோடு, வெளியில் எடுத்தோம் கன்றை. மஞ்சளாய் இருந்த கன்று, வெண்மையும், அடர்பழுப்பும் கொண்ட நிறத்தில் இருந்ததை அறிந்தோம், அதன் தாய் தன் நாவில் நீவியே, அதனை சுத்தப் படுத்தி, எழுப்பியபோது. அம்மாவும் அப்பாவும் தான் அதிகம் பயந்து விட்டார்கள். நான் மட்டும் 12 மணியளவில் உறங்கப் போனேன். காலையில் அலாரம் சத்தம் கேட்டு எழுந்து சென்று கொட்டகையைப் பார்த்தால், கன்று படுத்திருந்தது, தன் அம்மாவை ஈன்ற அம்மாவின் அருகில்.

1 comment: