சற்றேறக் குறைய மூன்று மாதங்களுக்குப் பின் இன்று குருவின் தரிசனம். பேங்க் ஆப் இந்தியாவில் இருந்தபோதும் சரி, இந்தியன் வங்கிக்கு வந்த பிறகும் சரி, குருஸ்தலங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு தொடர்பு, சிறப்பு ஈர்ப்பு இருந்துள்ளது. காவிரி சூழ்ந்த கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம் வரையிலான என் பேங்க் ஆப் இந்தியா நாட்களில், காவிரியும், பாபநாசமும், சுவாமிமலையும், உப்பிலியப்பன் கோயிலும், திருக்கருகாவூரும், சரஸ்வதி கோவிலும் மட்டுமல்லாமல், குருவுமல்லவா என்னை ஈர்த்தழைத்தார் ஆலங்குடியில். காவிரியும் கொள்ளிடமும் கண்கொள்ளாமல் விரிய விரிய கூட்டத்தோடு சென்று கும்மியடித்து பொழுது போக்கி வாராமல், என் மனமும் உடலும் ஒன்றாய் பயணித்துக் களித்த ரசித்து ரசித்து வாழ்ந்த நாட்கள். உச்சி வெயில், ஊர்மூழ்கடிக்கும் வெள்ளம் என கும்பகோணம் தனிதான்.
பின்னர் இந்தியன் வங்கியில் சேர்ந்த பின்பு, சென்னை- பிறகு மூன்றரை ஆண்டு காஞ்சிபுரத்திற்குப் பிறகு, என் முதல் கிளை மேலாளர் பொறுப்பு. கிளை நிர்வாகத்தின் வேர்கள் அறியாமல் தான் கம்மவார்பாளையத்தின் மேலாளரானேன். அப்பா வந்து என்னை என் இருக்கையில் அமர வைத்த அன்று கூறினார்-பயப்படக் கூடாதும்மா! நான் இருக்கிறேன் என்று. எல்லாம் நல்ல படியா நடக்கும்மா குரு பார்வை பக்கத்திலேயே இருக்கிறது கோவிந்தவாடியில் என்று. என் பால்கனியின் வெளியே வந்து பார்த்தேன். எதிரிலுள்ள ஆலயத்தில் குரு அஞ்சாதே என்று அருள்பாலித்தார். அன்றும் அதற்குப் பிறகும் நினைத்த்துண்டு வாரா வாரம் வியாழக் கிழமை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று. திருவண்ணாமையில் இருந்தும் கார்த்திகை தீபத்திற்கு மட்டுமே மலை சுற்ற போனது போல், இங்கும் 3-4 மாதங்களாகி விடுகின்றன குருவைப் பார்ப்பதற்கு. இன்றும் கூட லோக் அதாலத் நோட்டீஸ் கொடுக்கச் சென்றதால் தான், தற்செயலாக கோவிலின் வாசலில் ஒரு வாடிக்கையாளரைப் பார்க்கும் முகமாகத்தான் குரு என்னைத் தன்னைப் பார்க்க அழைத்திருந்தார். நானும் குருவும் மட்டும் தனியே அமைதியாக அரை மணி நேரம். நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது சன்னிதியில். அதனால் தான் அவர் குரு போலும்!
மாலையில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சூடான வாக்குவாதம். அன்னா ஹசாரே தேவையே இல்லை என்றார் என் உதவி மேலாளர். இளைஞர்கள் வேலையற்று அவர் பின்னால் கொடி பிடிக்கிறார்கள் என்றார். இதனால் ஊழல் ஒழியப்போவதில்லை. அன்னா ஹசாரே என்ன அதிக பட்சம் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருப்பார். பின் க்ளுக்கோஸ் ஏற்றிக் கொள்வார். இதனால் மாறப் போவது எதுவும் இல்லை என்றார். என் வாதம் இதுதான். 121 கோடி பேரில் 100 பேர் திருந்தட்டும் போதும். ஒரு அடியெடுத்து வைக்காமல் நெடும்பயணம் ஏது? சிறு தூண்டுகோல் இல்லாமல் ஒளிதான் ஏது? எனக்குள் ஏற்பட்ட பாதிப்பு, இன்னும் ஏனையோருக்கு ஏற்பட்டிருந்தால் எத்தனை பெரிய திருப்பம் அது? ஒரு தலைமுறை திருந்தும். அழகான மறு தலைமுறையை உருவாக்கும். அதற்கு அன்னா ஹசாரேயின் தலைமை ஒரு தூண்டுகோலாய் அமையட்டுமே! அமையும்.
என் தேசம் வளர்ந்திட நான் பாடுபடாவிடில் யார் பாடுபடுவது? என் நாடு சிறந்திட நான் போராடாவிடில் யார் போராடுவது? பெருமிதத்துடன் பேரமைதியுடன் பேருந்து ஏறினேன். என்றும் இல்லாமல் இன்று அமர இடம் கிடைத்தது.
வானம் வசப்படும்.
No comments:
Post a Comment