என் தாய்நாட்டின் அறுபத்தைந்தாவது சுதந்திர தினம் இவ்வாறாக தொடங்கியது. காலை சரியாக ஏழு முப்பது மணிக்கு பிரதமர் மழையுடன் கொடி ஏற்றினார். ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தீர்வாகாது என்றார். மகாத்மா நினைவிற்கு வந்தார். மாலையில் குமரி அனந்தன் இதையே வழி மொழிந்தார். மகாத்மா உண்ணாவிரதம் இருந்தது அன்னியர்களை எதிர்த்து. ஆகையால் அன்னா ஹஜாரே உண்ணாவிரதம் இருப்பது சரியாகாது என்றார். நீங்கள் எல்லாம் காந்தி வளர்த்த காங்கிரஸ்காரர்கள்தானே ஐயா!
ஒரு இனத்தையே அழித்துவிட்டு, வெட்கமோ, உறுத்தலோ இல்லாமல் இந்த நாட்டுக்கு வரும் ராஜபக்சேவின் பிரதிநிதிகளுக்கு, எதிர்ப்புத் தெரிவித்த நம்மவர்களை கண்டித்துவிட்டு, கொலைகாரர்களிடம் குடியரசுத்தலைவர் மன்னிப்புக் கேட்கிறார். ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் ஒரு முதியவரை அடக்கி ஒடுக்க கைது செய்கிறீர்கள்.
இதுவா சுதந்திரம். வெட்கக் கேடு. போதாதென்று ஜனநாயகத்தில் ஊழலை ஒழிக்க முடியாதென்று பேச இரண்டு பேர் வேறு.
நெஞ்சு பொறுக்குதில்லையே! இறைவா இந்த தேசத்தை இவர்களிடமிருந்து காப்பாற்று….!
எட்டரை மணிக்கு நானும் தம்பியும் வீட்டு மாடியில் தேசியக் கொடி ஏற்றினோம். மிகவும் பெருமிதமும் பேரானந்தமும் அடைந்த ஒரு அற்புத தருணமது. மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
தொலைக்காட்சியில் வழக்கம் போல் சாலமன் பாப்பையா, ஜெகத்ரட்சகன், லியோனி (Where’ve you gone Gnanasambandhan Sir?) இவர்களுடன்- இந்த வருட சிறப்பு நடுவராக சிங்கமுத்துவும் ஒரு தொலைக்காட்சியின் பட்டிமன்றத்தை சிறப்பித்துக் கொண்டிருந்தார். சற்று வித்தியாசமாக பொதிகையில் திரு. அப்துல்காதர் தலைமையில் கவியரங்கம். விஜய் டீவீயில் தமிழில் ஆங்கிலக் கலப்பு பற்றி கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலத்தில் தமில் எலுத்தாலர்கலும் இணைய தமில் காவலர்கலும் நிறைய கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். சிறப்பம்சம்- ழகரத்தைத் தன் பெயரில் கொண்டிருந்தவர்க்கு ழகரம் பட்ட பாடு அவர் நாவறியும். மற்றும் சில தொலைக்காட்சிகளில் அமலா பால், தமன்னா, அனுக்ஷ்கா, விக்ரம், நந்தா என பலரும் தேச பக்தியை வளர்த்துக் கொண்டிருந்தனர். காந்தி, Rang De Basanthi, பாரதி என சென்ற வருடம் வரையில் கூட ஒளீபரப்பிய தொலைக்காட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்து அவற்றை விடவும் சிறந்த தேச பக்திப் படங்களாகிய கில்லி, தூங்காநகரம், தம், கிரி, வானம் போன்ற சிறந்த படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. வல்லரசு வழக்கம் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடினார். வானம் எல்லா தவறுகளையும் காட்டி விட்டு, இறுதியில் நாட்டுப் பற்றைக் கொண்டாடியது. You too Simbu? எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, மாலையில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தை டிவிடியில் பார்த்தோம். தி ஹிண்டுவில் பகத்சிங்கின் கடிதங்களை படித்தவாறு Rang De Basanthi யும். சற்று ஆறுதலுக்காக.
இதெல்லாம் கூட பரவாயில்லை. TOP OF ALL. நான் மிகவும் வேதனைப்பட்ட, வெட்கப் பட்ட, அவமானப் பட்ட இரண்டு நிகழ்ச்சிகள் இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகின. ஒன்று பொதிகையிலும் மற்றொன்று மக்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. கேள்விகள் மிகச் சாதாரணமானவை தாம். பின்வருமாறு.
காந்திஜியின் இயற்பெயர் என்ன? பாரதியாரின் இயற்பெயர் என்ன? நம் தேசிய கீதம் எது? தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? காந்திஜி எழுதிய நூல் யாது? பகத்சிங் யார் ?எதற்காக எவ்வாறு கொல்லப்பட்டார்? பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட அவரது நண்பர்கள் பெயர் என்ன? வாஞ்சிநாதன் யார்? எதற்காக கொல்லப்பட்டார், நம் சுதந்திர தினம் எப்பொழுது? நாம் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எத்தனையாவது சுதந்திர தினம்? நம் குடியரசு தினம் எப்பொழுது? நாம் சுதந்திரம் பெற்ற பொழுது காந்திஜி எங்கிருந்தார்? பாரதியார் பாடல் ஏதேனும் ஒன்று பாடுக.
ஒவ்வொரு இந்தியனும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பெருமையுடன் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்.
ஆனால் இவற்றிற்கு கிடைத்த பதில்கள், பெரும்பாலும் தெரியாது. அல்லது கீழ்கண்டவாறு.
காந்திஜியின் இயற்பெயர் என்ன?- மகாத்மா காந்திஜி, மோகன்லால் கரம்சந்த் காந்தி, மோகன் காந்தி.
பாரதியாரின் இயற்பெயர் என்ன?- மகாகவி பாரதியார்,
நம் தேசிய கீதம் எது-ஜாரே ஜஹான் சே அச்சா, நீராரும் கடலுடுத்த, செம்மொழியான தமிழ் மொழியாம். இதைவிடக் கொடுமை- தப்பு தப்பாய் தேசிய கீதத்தைப் பாடிவிட்டு தேசிய கீதம் பாடுவதையே நிறுத்தி விட்டு, போதும் சார், பாட அசிங்கமாயிருக்கு என்ற இளைஞர் கூட்டம். இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லை.
தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?-தெரியவில்லை, பாரதியார், காந்திஜி எழுதிய நூல் யாது-தெரியவில்லை, சத்தியாகிரகப் போராட்டம், பகத்சிங் எதற்காக எவ்வாறு கொல்லப்பட்டார்-அவ்வளவாக தெரியவில்லை, சுடப்பட்டார்,
பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட அவரது நண்பர்கள் பெயர் என்ன?- என் friends பேரே ஞாபகம் இல்லை. ஏன் பாஸ் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு டென்க்ஷன் பன்றீங்க?
வாஞ்சிநாதன் யார், எதற்காக கொல்லப்பட்டார்?-கப்பம் கட்டாதததால் தூக்கிலிடப்பட்டார்.
நம் சுதந்திர தினம் எப்பொழுது?-செப்டம்பர் 9, 1957, 1946, 1985, 1954,ஆகஸ்ட் 17,
நாம் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?-88, 105, 58, 61, 85, 75, 57.
நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எத்தனையாவது சுதந்திர தினம்?-75, 63, 85, 58.
நம் குடியரசு தினம் எப்பொழுது?-1954, 1964 நிச்சயமாக.
நாம் சுதந்திரம் பெற்ற பொழுது காந்திஜி எங்கிருந்தார்?-நான் பிறக்கவே இல்லை, மேலே போய் விட்டார், சுட்டுக் கொன்று விட்டார்கள்.
பாரதியார் பாடல் ஏதேனும் ஒன்று பாடு- ஓடி விளையாடு பாப்பா.
இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கப் பட்டது- கல்லூரி வாசலில் இருந்த மாணவர்களிடமும், திரையரங்க வாசலில் இருந்த மாணவர்களிடமும், மென்பொறியாளர்களிடமும், எட்டாவது, பன்னிரண்டாவது படிக்கும் பள்ளி மாணவர்களிமும், அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களிடமும். ம்ஹூம். ஒருவராவது சரியாகச் சொன்னால் தானே. என் ஆசிரியர்கள் புத்திசாலிகளாக சமூக அக்கறை உடையவர்களாக இருந்து எங்களை உருவாக்கினார்களா? அப்படியானால் இன்றைய ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
நிகழ்ச்சி முடிவில் வருத்தத்துடனும், வேதனையுடனும் தொகுப்பாளர் கூறியது.
இந்நிகழ்ச்சியில் மகாத்மா மற்றும் பாரதியின் முழு பெயரைக் கூறுபவர்களுக்கு சத்திய சோதனை புத்தகத்தைப் பரிசாகத் தருவதாகத் திட்டம். ஆனால் பாதியாவது சரியாகச் சொன்னதற்காக தந்த புத்தகங்கள் மூன்று மட்டுமே. மற்றவை அப்படியே என்னிடம். வருங்கால இந்தியாவின் தூண்களை நினைத்தால் தான் மிக்க வேதனையாக இருக்கிறது என்று வருத்தத்துடன் முடித்தார், இந்த பாடலின் பின்னணியில்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா,
இச்சுதந்திரத்தை கண்ணீரால் காத்தோம்,
…… அது கருகத் திரு உளமோ.
Happy independence Day SMS உடன் நம் சுதந்திர உணர்வும், நாட்டுப் பற்றும் நிறைவு பெற்று விடுகின்றன அல்லவா! கண்கள் திறந்திட வேண்டும்.
வாழ்க இளைய பாரதம்.
No comments:
Post a Comment