Friday, November 11, 2011

நீ நான் நிலா..


அந்தரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு அலங்கார விளக்கு போலும், வட்டமாக வடிவெடுத்த ஒரு புதிய கோழி முட்டை போலும், கருப்பு வண்ணத்திரையில் யாரோ வட்டமாக துளையிட்டது போலும் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது பெளர்ணமி நிலா.கடந்து போகும் மேகங்களில் நிலா சிரிக்கிறது, முறைக்கிறது கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்றது. வட்டம், பிட்ட அப்பமாகி, அரை வட்டமாகி, பிறையாகி, முழுதாய் மறைந்தோடி, பளீரென மீண்டும் பிறந்து வருகின்றது நிலா இன்னும் பிரகாசமாய், இன்னும் இன்னும் இன்னும் அழகாய். மேகங்கள் சூழ்ந்த கார்கால இரவுகளிலும், மேகமே இல்லாத கோடை இரவுகளிலும், தனக்கென ஒரு தனித்துவத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறது நிலா. நிலா கும்பல்களிலும், கண்ணாமூச்சி ஆட்டங்களிலும், குலை குலையாம் முந்திரிக்காயிலும் சிறார்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது நிலா. தனி இரவுப் பயணங்களிலும், கால் நனைக்கும் கடலலைகளிலும், கோடையின் மொட்டை மாடி இரவுகளிலும், நில்லாமல் உடன் வருகிறது நிலா, மனிதரைப் பாடேன் என நான் சபதமேற்ற ஓரிரவிலும், என் மொழி வைராக்கியம் மெல்லக் கரைந்த மற்றொரு இரவிலும் சலனமற்ற சாட்சியாக இருந்தது நிலா. கவியரங்கம் முடிந்து நாம் கதை பேசிப்போன இரவுகளிலும், மெளனத்தின் கைபற்றி நாம் காலாற நடந்த நாட்களிலும், நம் நட்பின்  பொய் விரிசலை மெய்யான உன் கண்ணீரும் பொய்யான என் கோபமுமாக ஒரு புதிய பசை கொண்டு பசிய ஒட்டிச் சென்ற அந்த பனி ஊறிய இரவுகளிலும் நட்பிற்கு நீர் பாய்ச்சி நம்மோடு இருந்தது நிலா. சிம்லாவின் சில்லென்ற இரவுகளிலும், சென்னையின் சூடான இரவுகளிலும், யமுனை சலசலத்த தாஜ் மகால் இரவுகளிலும், கங்கை ஆர்ப்பரித்த ஹரித்வார் இரவுகளிலும், சேர்ந்தல்லவா  பயணித்தது இந்த நிலா. நிலா நினைவுகள் இன்று பெளர்ணமியாக உருவெடுக்கக் காரணம் வெண்ணிலா, என் நிலா, என்னை நானாகவே அப்படியே ஏற்றுக் கொண்ட என் உயிர்த் தோழி வெண்ணிலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற விழித்துக் கொண்டிருக்கும் இந்த 11.11.11லும் என்னுடன் விழித்துக் கொண்டிருக்கிறது என்னுடன் பிறந்து, வளர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் மாறாத அதே நிலா. HAPPY BIRTHDAY ICE. நிலவும் நானும் பாடிக் கொண்டிருக்கும் உனக்கான பிறந்த நாள் வாழ்த்துப் பாடல், உன் காதுகளை எட்டுகிறதோ இல்லையோ? உன் கனவுகளையேனும் தாலாட்டட்டும். THANK YOU FOR BEING MY FRIEND N FOR ACCEPTING ME AS I AM. GOD BE WITH YOU. MANY HAPPY RETURNS. GOOD NIGHT/MORNING.

No comments:

Post a Comment