Tuesday, November 22, 2011

தேவதைகளின் தேசம்!

அழகு அழகு தேவதை! பாடல் செவியில் வழிந்து கொண்டிருக்கிறது. நினைத்துக் கொள்கிறேன், தேவதைகள் கற்பனைக் கதைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் வாழ்கிறார்கள் ஒவ்வொரு தாயின் உருவிலும் என.

 பள்ளிக்காலங்களில் ஒவ்வொரு கிருஸ்துமஸ் விழாவின் போதும், குழந்தை இயேசுவின் பிறப்பைப் பற்றி மேரி மாதாவிற்குத் தெரிவிக்கும் தேவதையாக வலம் வந்த என் வாழ்விலும் தேவதைகள் வந்திருக்கிறார்கள்; வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள், என் வியப்பைப் புறந்தள்ளி சகஜமாக சாதாரண பெண்மணிகளாக பேசிப் பழகி இருக்கிறார்கள், பேசாமல் கடந்து போயிருக்கிறார்கள், உடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எனக்குக் கருத்து தெரிந்து உலகத்தின் மிகச் சிறந்த அழகி, நான் கேட்பதற்கு மேலாகவே அன்பை அள்ளி அள்ளி வழங்கும் என் அம்மா. அதிலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் தன் தோழியுடன் அம்மா நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அம்மா அத்தனை அழகு. INNOCENT BEAUTY. என் இரண்டரை வயது புகைப்படத்தில் இன்னும் கொள்ளை அழகு அம்மா. எல்லா மகள்களைப் போலும் சிறுவயதில் நான் எப்பொழுதும் அப்பா செல்லம். இப்பொழுதும்தான். மிதிவண்டியின் முன்னிருக்கை எப்பொழுதும் என்னுடையதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் மதிய நேர தக்காளி சாதம் முட்டையுடன் அம்மா தன் பாசத்தையும் சேர்த்து அனுப்பியிருந்ததை எப்பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் தம்பிக்குமான காலை நேரக் கலவரங்களை அம்மாவின் கன்ணீரே பெரும்பாலும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு பொறுப்பான ஆசிரியர் என்பதைத் தாண்டி, சிறந்த தலைமை ஆசிரியர் என்பதைத் தாண்டி அம்மா அழகான அடக்கமான குடும்பத் தலைவியாய், ஒரு அன்பான அருமையான பெண்மணியாய், ஒரு அறிவார்ந்த அருள் பொழியும் அற்புதமான அழகு தேவதையாக இருப்பதை பெருமிதத்துடன் நான் உணர ஆரம்பித்தது நான் கல்லூரியில் சேர்ந்த பின்புதான். தனியாக என் வேலைகளை நான் செய்து கொள்ளும் தேவை வந்தபோதுதான், அம்மா எனும் தேவதையின் அருமை தெரிந்தது. I ALWAYS WANTED TO SAY THIS TO YOU MA. I LOVE YOU SO MUCH. பணி நிறைவு பெற்ற பின்னரும் இன்று வரை அயராமல் எங்களுக்காக உழைக்கும் அம்மா ஒரு அன்பான தேவதை என்பதில் ஐயமேதும் இல்லை.

வெளி உலகிலும் தேவதைகள் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். நான் பதினோராம் வகுப்பு பயின்ற நேரம் என நினைவு. பள்ளி முடிந்து திரும்பிய ஒரு பேருந்துப் பயணத்தில் பார்த்த அந்தப் பெண்ணைப் போன்று ஒரு அழகியை நான் இது நாள் வரையில் காணவில்லை. ஒரு கல் குவாரியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் ஒரு எளிய நரிக்குறவர் குடும்பத்துப் பெண். ஒரு சிறிய மூக்குத்தி, கவரிங் கம்மல், வெளிரிய தாவணி, கலைந்த தலை, களைத்த முகம், எல்லாம் தாண்டி ஒளி வீசும் கண்களுடன் உடன் பயணித்த அந்த தேவதை போன்ற பெண்ணைப் பின்னொரு நாள் பார்த்ததாக ஞாபகமே இல்லை. அவளைப் போன்றொரு பெண்ணையும் பிறகு பார்க்கவே இல்லை. தேவதைகள் அழுக்கு தாவணியும் கட்டியிருப்பார்கள் என உணர்ந்த நாள் அது.

கல்லூரியில் UGயின் போதும் PGயின் போதும் இருவேறு தேவதைகளைச் சந்தித்திருக்கிறேன். UGயில் மாருதியின் ஓவியம் உயிரோடு வந்தது போல் இருந்த ஒரு சீனியர் PG மாணவி. பெயர் தெரியாத அவரைப் பார்ப்பதற்காகவே அவர் துறை பக்கம் செல்வதுண்டு. உன் ஆள் வந்தாச்சு. YOU ARE CRAZY YA என்பாள் பானு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பித்துப் பிடிக்க வைத்த முகம் அது. கண்கள், மூக்கு, வாய், நெற்றி என ஒரு ஓவியமாகத்தான் தோற்றமளித்தார் அந்த அழகு தேவதை அக்கா. பின்பு ஒரு துணைப் பேராசிரியரை மணமுடித்ததாகக் கேள்வி. ஆனால் உண்மையா எனத் தெரியவில்லை.

ஆனாலும் பித்தம் தலைக்கேறி கடிதம் எழுதியது லாவன்யா SIS இடம்தான். எளிய, சாதாரணமான ஆனால் அத்தனை அழகான ஒரு பெண். என் இளங்கலை இறுதி ஆண்டில், PG படித்துக் கொண்டிருந்த லாவன்யா அக்காவிற்கு நான் எழுதிய கடிதம் எங்கள் நண்பர்களிடையே வெகு பிரசித்தம். HOW YOU COULD BE SO BEAUTIFUL? YOU’RE SO GORGEOUS SO THAT I COULDN’T TALK TO YOU STRAIGHT. N ITS SO PAINFUL. I ALWAYS WANTED TO SAY THIS. YOU ARE REALLLLLY REALLLY BEAUTIFUL LIKE MY MOM. WILL YOU BE MY FRIEND AND TALK TO ME. என எழுதி லாவன்யா அக்காவிற்கு அனுப்பியே விட்டேன். யார்யா அந்தப் பொண்ணு? கலை மூலம் அழைப்பு வந்தது. சிறு கூச்சம், அசட்டுத்தனம், நண்பர்களின் கேலி என நடந்த அறிமுகப் படலத்தின் பின் அந்த அழகு தேவதையின் நட்பு வட்டத்தில் நானும் ஐக்கியமானேன். லாவன்யா அக்காவிற்கு அம்மா இல்லை, அப்பா மற்றும் தம்பிக்கு SISதான் அம்மாவாக இருப்பதை அறிந்து அன்றிரவு உண்மையாகவே அழுதேன். அம்மாவின் அழகு லாவன்யா அக்காவிடம் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். PG யிலும் தொடர்ந்தது எங்கள் நட்பு. என் SENIOR RESEARCH FELLOWSHIPன் போது லாவன்யா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பயங்கர சாலை விபத்தில் சிக்கி, மிக்க சிரமத்தின் பின்னரே மருத்துவர்களால் பிழைக்க வைக்கப்பட்ட லாவன்யா SISSY. உடைந்த கால் கூடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். வலியுடன் விந்தி நடந்த போது நான் அழத்தொடங்கி இருந்தேன் அந்த அழகு தேவதையைப் பார்த்தவாறு. அவரைப் போன்றொரு அழகான பெண்ணை நேற்று முன் தினம் அலுவலகம் செல்லும் பேருந்தில் பார்க்க நேர்ந்தது. தெரிந்த ஆசிரியர்களில் அவர் தெரியாத அறிமுகம். இறங்குகையில் கவனித்தேன், அவர் விந்தி நடப்பதை. தேவதைகளுக்கு இறக்கைதான் முக்கியமே தவிர கால்கள் அல்ல. அவர்கள் அறிவென்றும் அன்பென்றும் தங்கள் இறக்கைகளை விரிக்கத் தவறுவதே இல்லை.

MATHS MISS RAJESWARI, BIOTECH MADAM PARVATHI, PARAMJEET KAUR என தேவதைகள் எப்பொழுதும் என்னுடன் பயணித்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர்த்து, வெள்ளித்திரையில் திவ்ய பாரதி என்றொரு நடிகை என்னை வெகுவாகக் கவர்ந்தார். நிலாப் பெண்ணே என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் பருவமடையும் வரை இயக்குனர் காத்திருந்ததாகக் கேள்வி. ஆனால் அந்தத் தாரகை வெகு சீக்கிரம் மின்னி மறைந்து விட்டார். ப்ரியமானவளே! பாரதி கண்ணம்மா! எனத் தொடங்கி அவருக்காக எழுதிய கண்ணீர் கவிதை ஒன்று இப்பொழுதும் என் பள்ளி கால கவிதைப் புத்தகத்தில்.

அதற்குப்பின் UNDOUBTEDLY AISHWARYA RAI. அன்பே! அன்பே! கொல்லாதே! பாடல் அவருக்கே அர்ப்பணம்.

திரைப்படங்களில் சிம்ரன் மற்றும் காஜோல் சற்று வித்தியாசமாக எதிர்பாராத பொழுதுகளில் ஈர்த்தவர்கள். DDLJ முதல் KKHH வரை காஜோலின் கண்கள் சாமானிய தேவதைகளின் கதைகளுக்கு அழகு சேர்த்துள்ளன.

சிம்ரன்-கனவுக் கன்னி எனக் கவர்ச்சிப் பதுமையாகத் தள்ளி விட முடியாத அழகான பெண். VIP படத்தில் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” பாடல் முடியும் முன் I LOVE YOU எனச் சொல்கையில் உயிரை ஊடுருவும் சிம்ரனின் கண்களைப் பார்ப்பதற்காகவே நிறைய நாள் நான் காத்திருந்ததுண்டு; பார்த்தாலே பரவசம் படத்தில் “முதலியார்! உன் பொண்ணோட நிலைமையைப் பார்த்தியா?” எனப் பொருமுகையில் சிம்ரன்; 12B CLIMAXல் மருத்துவமனையில் நிச்சலனமாக நிற்கும் சிம்ரன்; வாரணம் ஆயிரத்தில் “ சூர்யா! அம்மாகிட்ட வந்திடுடா!” எனும் சிம்ரன் என அழகிற்கு அழகாக அர்த்தம் சொன்ன சிம்ரன், கதாநாயகிகளுக்கும் கதையில் வேலையுள்ளது என அசர வைத்த சிம்ரன் சமீப கால சினிமாவில் ஒரு ஆச்சர்ய அறிமுகமே. BUT ONCE A SIMPLY BEAUTIFUL SIMRAN. இப்பொழுது ஜாக்பாட் என்று கூத்தடிப்பது நிஜமாகவே UNBEARABLE.

இதை எழுதிக் கொண்டிருக்கையில் யோசிக்கிறேன். பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ என எழுதியது பொய்யாகவும் இருக்கக் கூடும். அழகான பெண்களை அவர்களாகவே ஆராதிக்கப் பெண்கள் தயங்குவதில்லை என்பது மெய்யாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் தேவதைகளின் தேசம் அழகானது மட்டுமல்ல ஆச்சர்யமானதும் கூட.

No comments:

Post a Comment